டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; சந்தேக நபரின் அதிர்ச்சி தரும் அறிக்கை
அமெரிக்கா வொஷிங்டன் ஹில்டன் விருந்தகத்தில் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் இரவு விருந்து நடைபெற்ற போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சுமார் 2,500 விருந்தினர்கள் உள்ளே இருந்த நிலையில், கலிபோர்னியாவைச் சேர்ந்த நபரொருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 31 வயதான கோல் தோமஸ் ஆலன் (Cole Tomas Allen) என்ற இந்த நபர், தாக்குதலுக்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாக தனது குடும்பத்தினருக்கு அனுப்பிய 'எதிர்ப்பு அறிக்கை' (Manifesto) தற்போது விசாரணையில் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

விசாரணையில் பல உண்மைகள்
தன்னை ஒரு "நட்பான ஃபெடரல் கொலையாளி" (Friendly Federal Assassin) என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஆலன், தனது முக்கிய இலக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் என்று பட்டியலிட்டுள்ளார்.
எனினும், எஃப்.பி.ஐ (FBI) பணிப்பாளர் காஷ் படேலை மட்டும் அவர் தனது இலக்கு பட்டியலில் இருந்து தவிர்த்துள்ளார். இந்த நாட்டில் ஒரு பாலியல் குற்றவாளி மற்றும் துரோகியின் பேச்சை கேட்க வந்த அனைவரும் இந்த குற்றங்களுக்கு உடந்தையானவர்களே" என்று அவர் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.
மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிக்கும் போது அமைதியாக இருப்பது கிறிஸ்தவ பண்பு அல்ல, அது குற்றத்திற்குத் துணை போவதாகும் என்றும் அவர் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்புப் பிரிவினரின் மெத்தனப் போக்கை அந்த அறிக்கையில் பகிரங்கமாக விமர்சித்துள்ள அவர், தான் பல ஆயுதங்களுடன் விருந்தகத்துக்குள் நுழைந்தும் எவரும் தன்னைச் சோதனையிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புப் பிரிவினர் அனைவரும் வெளியில் வரும் விருந்தினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். முந்தைய நாளே விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருக்கும் ஒருவரைப் பற்றி எவரும் யோசிக்கவில்லை.
இந்த அளவிலான திறமையின்மை மிகவும் முட்டாள்தனமானது" என்று அவர் எழுதியுள்ளார். தாக்குதலுக்கு முன்னதாக இந்த அறிக்கையைப் பெற்ற ஆலனின் சகோதரர், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ட்ரம்ப் அமர்ந்திருந்த மண்டபத்தை அவர் நெருங்குவதற்கு முன்னதாகவே பாதுகாப்புப் படையினர் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
அதேவேளை ஆலனின் சகோதரி அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது சகோதரருக்கு நீண்டகாலமாகவே அரசியல் ரீதியான தீவிரவாத கருத்துக்கள் இருந்ததாகவும், உலகப் பிரச்சினைகளைத் தீர்க்க ஏதாவது செய்யப்போவதாகவும் அவர் கூறி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.