பாதாள உலகக் கும்பல் தலைவனின் மனைவியின் வீடு மீது துப்பாக்கிச் சூடு
'படுவத்தே சாமர' எனப்படும் பாதாள உலகக் கும்பல் தலைவனின் மனைவியின் வீட்டை இலக்கு வைத்து இன்று (07) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1:25 மணியளவில் ஜா-எல , வெலிகம்பிட்டிய, புனித அந்தோனியார் வீதியில் அமைந்துள்ள இலக்கம் 05 என்ற வீட்டின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

முதியோர் இல்லம் ஒன்றிற்காக வாடகை
இதன்போது குறித்த வீட்டின் மீதும் அருகிலுள்ள மேலும் இரு வீடுகளின் மீதும் சுமார் 23 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் 'படுவத்தே சாமர'வின் மனைவியான சதுரிகா வீரசூரிய என்பவருக்குச் சொந்தமான குறித்த வீடு, கடந்த இரண்டு மாதங்களாக முதியோர் இல்லம் ஒன்றிற்காக மாதாந்தம் 1,25,000 ரூபா வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற வேளையில் இல்லத்தில் 9 முதியவர்களும் 4 தாதியர்களும் இருந்துள்ளனர். எனினும், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. படுவத்தே சாமரவின் மனைவி துபாயில் தங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னரும் கடந்த 2025 டிசம்பர் 15 மற்றும் 24 ஆம் திகதிகளில் இதே வீட்டின் மீது இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.