இலங்கையின் இளைஞர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
ஒவ்வொரு மாதமும் சுமார் 40 இளைஞர்கள் புதிதாக குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக இலங்கை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளரும் குற்றவியல் நிபுணருமான டி.எம்.எஸ்.தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் குறித்து சமீபத்திய காலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இதை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல்தர குற்றவாளிகள்
நாட்டில் நிகழும் குற்றங்களை சர்வதேச மட்டத்துடன் ஒப்பிடும் போது, அது ஒரு குறிப்பிட்ட அளவிலான அதிகரிப்பைக் காட்டுவதாகவும் கடந்த சில மாதங்களுக்குள் 40 - 50 வரையான இளைஞர்கள் புதிதாகக் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் முதல்தர குற்றவாளிகளாக சிறையிலடைக்கப்படுவதாகவும் குற்றங்கள் அதிகரிப்பது சர்வதேச அளவில் ஒரு நாட்டிற்கு மிகப்பெரிய பாதகமாகுமெனவும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக இலங்கை மிகவும் நிலையற்ற நிலையில் இருந்து அதன் பொருளாதாரத்தை படிப்படியாக வலுப்படுத்தி வரும் சூழ்நிலையில், குற்றம் நடப்பது ஒரு பயங்கரமான சோகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.