வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்
கொழும்பு - நாரஹேன்பிட்டி, லங்கா வைத்தியசாலையின் கழிவறையிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையை சேர்ந்த முதல் சந்தேக நபருடன் சேர்ந்து, கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சரவை அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கைக்குன்டுடன், தோட்டாக்களை திருடிச் சென்ரதாக விசாரணையில் வெளிப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.
பயங்கர்வாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் முதலில் கைது செய்யப்பட்ட நபர் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் உறுதிச் சான்றிதழைப் பெற்று, அவரை கடந்த 15 ஆம் திகதி மாலை முதல் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
குறித்த கைக்குண்டானது, கொழும்பு 7 விஜேராம பகுதியில் உள்ள பிரபு ஒருவரின் வீட்டிலிருந்து தனக்கு கிடைத்ததாக சந்தேக நபர் விசரணையின் போது பொலிஸாருக்கு தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
குறித்த வீட்டில் 3 மாதங்களுக்கு முன்னர் தான் புதுப்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது அவ்வீட்டின் அறையொன்றின் மேசை இலாச்சியிலிருந்து அந்த குண்டு கிடைத்ததாகவும், அங்கு மேலும் 18 தோட்டாக்களும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோட்டாக்களை தனது நண்பர் எடுத்துக்கொன்டதாகவும், கைக்குண்டினை தான் எடுத்து சென்ரதாகவும் இதன்போது பொலிஸாரிடம் முதல் சந்தேக நபர் கூறியுள்ளார். இந் நிலையில் அது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்த போது, சந்தேக நபர் கூறும் வீட்டில் தற்போது அமைச்சர் ஒருவர் குடியிருப்பது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் சந்தேக நபர் கூறும் 3 மாதங்களுக்கு முன்னரான காலப்பகுதியில் அவ்வமைச்சர் அங்கு இருக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவித்தன. சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் உண்மைத் தன்மை தொடர்பிலும் மேலதிக விடயங்கள் குறித்தும் விசாரணைகள் தொடர்ந்த நிலையில், முதல் சந்தேக நபர் வெளிப்படுத்திய தகவல்கள் பிரகாரம் ஆராயப்பட்டது.
இதன்போது குறித்த புதுப்பித்தல் நடவடிக்கையில் 6 பேர் ஈடுபட்டுள்ள நிலையில், முதல் சந்தேக நபரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 2 ஆம் சந்தேக நபரும் அவ்வீட்டை துப்புரவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந் நிலையிலேயே தோட்டாக்களை எடுத்துச் சென்ற முதல் சந்தேக நபரின் நண்பரைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி முதலில் மாஹோ பகுதியில் உள்ள 2 ஆம் சந்தேக நபரின் காதலி வீட்டுக்கு பொலிஸ் குழு சென்றிருந்தது.
2 ஆம் நபர் அங்கு மறைந்திருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் குழு அங்கு சென்றிருந்த போதும் அவர் அங்கிருக்கவில்லை.
இவ்வாறான நிலையிலேயே வெலிக்கந்தையில் வைத்து குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ள பொலிசார், அவரிடமிருந்து 18 தோட்டாக்களையும் மீட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.