கொழும்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ; வீட்டுக்குள் புகுந்து கோடிக்கணக்கில் திருட்டு
கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில், வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய பெண் ஒருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (22) நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்றதாக, பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (22) நாரஹேன்பிட்டி பகுதியில் 11 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் திருடப்பட்ட தங்க நெக்லஸுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த நபரை விசாரணைக்குட்படுத்தியபோது, சொத்துக்களை அப்புறப்படுத்தியதற்காகவும், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விசாரணைக்கமைய பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 62 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 03 திருடப்பட்ட கைக்கடிகாரங்கள், ஒரு ஜோடி தங்க காதணிகள் மற்றும் 02 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் 02 வாசனை திரவிய போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆண் சந்தேக நபர்கள் 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், பெண் சந்தேக நபர் 29 வயதுடையவர் எனவும், அவர்கள் நாரஹேன்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.