கழுத்தறுக்கப்பட்ட இளைஞனின் கொலை வழக்கில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்
கூரிய ஆயுதத்தால் தம்பியே அண்ணனை கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இச் சம்பவம் களுத்துறை, தேக்கவத்தை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
அத்தோடு சந்தேகத்தின் பேரில் 14 வயது இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த கொலைச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம்
சிறுவனின் தாக்குதலில் படுகாயமடைந்த மூத்த சகோதரர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது இளைய சகோதரருடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரைப் பார்ப்பதற்காக அவர்களது தாய் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து இளைய சகோதரன் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.
அனுருத்த தனஞ்சய டி சில்வா என்றழைக்கப்படும் 26 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
காதல் தொடர்பால் தகராறு
நேற்று காலை குறித்த சிறுவனின் காதல் விவகாரம் தொடர்பில் இவர்களுக்கிடையில் வாக்குவாதமொன்று இடம்பெற்றுள்ளதுடன் காதல் தொடர்பை துண்டிக்குமாறு மூத்த சகோதரன், சந்தேகநபரான இளைய சகோதரனை வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது வாக்குவாதம் முற்றியதையடுத்து 26 வயதான சகோதரன் பாடசாலை மாணவனான தமது சகோதரனை தாக்கிவிட்டு உறங்கச் சென்றுள்ளார். அதன்போது சந்தேகநபரான சிறுவன் உறக்கத்தில் இருந்த தமது மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தினால் கழுத்து பகுதியில் வெட்டிக் கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
9ஆம் தரத்தில் கல்வி கற்கும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் நேற்று சட்ட வைத்திய பரிசோதனைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவர் தற்போது களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.