யானை வைத்திருந்த அலி ரொஷானுக்கு 15 வருட கடூழிய சிறை
உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, 15 வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, சந்தேக நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
யானை பறிமுதல்
அதோடு அதற்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு 2.06 பில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன் யானையைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
நீண்ட விசாரணைக்குப் பின்னர், நீதிபதிகள் மஞ்சுள திலகரத்ன, ஆர்.எஸ்.எஸ். சபுவித மற்றும் லங்கா ஜயரத்ன ஆகியோர் அடங்கிய மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மேலும் சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏனைய மூன்று பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யவும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.