யாழ் பட்டதாரி பெண்ணின் அதிர்ச்சி முடிவு ; விரக்தியிலிருந்து துறவறம்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பட்டதாரி பெண் அலுவலர் ஒருவர் தனது அரசுப் பணியை விட்டு துறவற வாழ்க்கையில் ஈடுபடுவதற்காக இந்தியாவுக்கு சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனஅழுத்தம்
பணவசதியான குடும்பத்தைச் சேர்ந்த குறித்த பெண், தனிப்பட்ட காரணங்களால் நீண்டகாலமாக மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, திருமணம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக அவர் விரக்தியடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது தாய் மற்றும் சகோதரரிடம் இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்கிறேன் என தெரிவித்துவிட்டு சென்ற அவர், பின்னர் மீண்டும் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், குடும்பத்தினர் தொடர்புகொண்டபோது, இந்தியாவில் உள்ள பெண்கள் துறவற மையமொன்றில் இணைந்துள்ளதாகவும், இனி தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் குடும்பத்தினருடன் தொடர்பை துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த பெண்ணை மீண்டும் தொடர்புகொண்டு அழைத்து வருவதற்காக அவரது உறவினர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.