2022 வரவு செலவு திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - அரச ஊழியர்களிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிதி அமைச்சரினால் உரை நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில்.இம்முறை வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சலுகைகள் பல குறைக்கப்பட்டுள்ளது .
குறித்த உரையில் கொவிட் காரணமாக அனைத்து வருமான வழிமுறைகளும் தடைப்பட்டிருந்தாலும், மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் எங்களிடம் வாய்ப்பு உள்ளது என்று நிதி அமைச்சர் கூறினார்.
இலங்கையில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கொவிட் பரவலுக்கு முகங்கொடுத்து உள்ளூர் தொழில் முயற்சியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கான தளமாக இலங்கையை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சந்தையில் சேவை மற்றும் பொருட்களின் விலைகளில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கட்டுப்படுத்த பாரம்பரிய வழிமுறைகள் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைப் பொருளாதாரத்தை உற்பத்திப் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் நீண்ட கால வேலைத்திட்டத்தில் ஈடுபடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
வர்த்தக நிலுவை பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு சேவைத் துறையிலிருந்து அதிக பங்களிப்பைப் பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார். அரச நிறுவனங்களின் தொலைபேசி கட்டண சலுகைகளை 25 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டை சமர்ப்பித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதெல்லை 10 வருடங்களால் நீடிக்கப்படும் எனத் தெரிவித்தார். ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைய புதிய சம்பள அமைப்பும் முன்மொழியப்பட்டுள்ளது.
பணியாளர்களை வலுப்படுத்தும் வகையில் அரச சேவையில் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை சமுர்த்தி பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான தர்க்கரீதியான முறையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் புதிய அரச அலுவலகங்களின் நிர்மாணப் பணிகள் 2 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் பாராளுமன்ற ஓய்வூதியம் கிடைக்கப்பெற வேண்டுமாயின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராக 10 வருடங்கள் கடமையாற்றி இருக்க வேண்டும் என்பதுடன் அரச உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் மானியம் 5 லீற்றரால் குறைக்கப்பட்டுள்ளது அத்துடன் மின்சார கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.