தோஷம் கழிப்பதற்காக புதைக்கப்பட்ட தங்கம் மாயமானதால் அதிர்ச்சி
இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் மூவரினால் வீட்டில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்ட சம்பவம் ஒன்று சிலாபம் முன்னேஸ்வரம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அங்குள்ளவர்களுக்கு தோஷம் இருப்பதாகவும், அதை நீக்கும் வகையில் தங்கத்தை புதைத்து சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என கூறி ஏமாற்றி குறித்த திருட்டு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.
சிறப்பு பூஜை
சிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த சுமார் முப்பத்தைந்தாயிரம் ரூபா பணம் காணாமல் போனதால் குறித்த வீட்டின் உரிமையாளர் சாஸ்திரம் பார்க்கும் மூன்று பேரை சந்தித்து, இது பற்றி கேட்டுள்ளார்.
அப்போது குறித்த மூவரும் வீட்டில் தோஷம் இருப்பதாகவும், அதை அகற்ற சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்றும் உரிமையாளர்களிடம் கூறியுள்ளனர்.
அதன்படி, வீட்டில் உள்ளவர்கள் தங்கப் பொருட்களை ஒரு தொட்டியில் புதைத்துவிட்டு, இரண்டாவது நாளில் மீண்டும் பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பூஜையை நடத்தியவர் வெள்ளிக்கிழமை வருவேன் என்று கூறியிருந்த நிலையில், அவர் வராததால் தங்கப் பொருள்கள் இருந்த பானையை அப்பகுதியினர் தோண்டிப் பார்த்தபோது அதில் தங்கப் பொருள்கள் எதுவும் இல்லாதது தெரியவந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.