யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வீடொன்றில் இருந்து 10 கிலோ மாட்டிறைச்சி மற்றும் 20 மதுபான போத்தல்களுடன் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்லைப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடொன்று இறைச்சியாக்கப்படுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை
அதன்அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது , மாடொன்று இறைச்சியாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அருகில் உள்ள வீட்டின் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் , வீட்டில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன் போது வீட்டினுள் இருந்து 20 மதுபான போத்தல்களையும் குளிர்சாதன பெட்டியில் இருந்து 10 கிலோ இறைச்சியையும் மீட்டதுடன் , வீட்டின் உரிமையாளரையும் கைது செய்தனர்.
தமது வீட்டில் கொண்டாட்டம் ஒன்றிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் , அதற்காகவே மதுபான போத்தல்களும் , இறைச்சியும் இருந்தது என வீட்டார் கூறிய போதும் , அதனை ஏற்காத பொலிஸார் , குடும்பஸ்தரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கபப்டுகின்றது.