கனடா கனவில் இருந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாண இளஞர் ஒருவரை கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து 43 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்தவர் யாழ்ப்பாண பொலிஸாரால் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தன்னை ஊடகவியலாளர் என, இளைஞரிடம் அறிமுகப்படுத்தி மோசடியில் ஈடுபட்டவரே இவ்வாறு கைதாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
43 இலட்ச ரூபாய் மோசடி
கனடாவில் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதற்காக இலங்கையில் இருந்து சில ஊடகவியலாளர்களை அழைத்து செல்ல உள்ளதாகவும் , அவர்களுடன் கனடாவில் இறக்கிவிடுவதாக யாழ் இளைஞனுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
அதற்காக ஊடகவியலாளர் அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறி இளைஞனிடம் இருந்து 43 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று, ஊடக நிறுவனம் ஒன்றின் அடையாள அட்டையையும் வழங்கியுள்ளார்.
பணத்தினை பெற்று நீண்ட காலமாகியும், கனடாவில் இசை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறுவதாக இளைஞன் அறியாத நிலையில், தனது பணத்தினை மீள தருமாறு கோரியதை அடுத்து சந்தேக நபர் , இளைஞனின் தொடர்பை துண்டித்துள்ளார். அதனால் இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
அவரது முறைப்பாட்டின் பிரகாரம் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சந்தேக நபர் வவுனியாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதேவேளை, இளைஞனுக்கு வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தபோது , அந்த ஊடக நிறுவனத்தினை மோசடி செய்த நபரே நடாத்தி வந்தமையும் தெரிய வந்துள்ளது.
பொலிஸாரின் தீவிர விசாரணைகளை அடுத்து, தலைமறைவாகி இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , குறித்த நபர் பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.