சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதாக கூறி ஷாப்பிங் செய்யும் ஷிரந்தி ராஜபக்ச
மருத்துவத் தேவைக்காகச் சிங்கப்பூர் சென்றதாகக் கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூரில் ஷாப்பிங்கில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி அதிகாலை நாட்டைவிட்டு வான் வழியாகச் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.

வைரலாகும் புகைப்படம்
இதயம் தொடர்பான மேலதிக சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த பின்னணியில், அவர் அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறியது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், அவர் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றதாகக் கூறப்பட்டாலும், சிங்கப்பூரில் ஷாப்பிங் மால் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அவர் ஷாப்பிங்கில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.
இது பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.