கிளிநொச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதம்: இளைஞன் பலி! சகோதரன் வைத்தியசாலையில்
கிளிநொச்சியில் எறிகணையொன்றை பரிசோதித்தபோது அது வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 13 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் சிவலிங்கம் யுவராஜ் (25) என்பவரே உயிரிழந்துள்ளார். மேலும், சம்பவ இடத்தில் நின்ற அவரது 13 வயதுடைய சகோதரன் சிவலிங்கம் நிலக்சன் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டை சூழவுள்ள சில பகுதிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
