ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல் ; இளைஞனின் செயலால் பெரும் துயரம்
காட்பாடி அருகே கர்ப்பிணியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிய வழக்கில் வாலிபர் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் நேற்று அறிவித்தது. வரும் திங்கட்கிழமை தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தது.
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் 35 வயது பெண். 4 மாத கர்ப்பிணியாக இருந்த இவர், திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த பிப்ரவரி மாதம் சொந்த ஊர் செல்வதற்காக திருப்பூரில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் மகளிர் பெட்டியில் பயணித்தார்.
பாலியல் துன்புறுத்தல்
அந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த ஹேமராஜ் (30) என்ற வாலிபர், பெண்கள் பெட்டியில் ஏறினார். இதைக்கண்ட அந்த பெண், அந்த வாலிபரை இறங்கும்படி கூறினார். ஆனால் அதற்குள் ரயில் புறப்பட்டது.
இதனால் அடுத்த ஸ்டேஷனில் இறங்குவதாக ஹேமராஜ் கூறிவிட்டு பெண்கள் பெட்டியில் பயணித்தார். ஆனால் அந்த பெட்டியில் கர்ப்பிணி பெண்ணை தவிர வேறு யாரும் பயணிக்கவில்லை. இதையறிந்துகொண்ட ஹேமராஜ், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், ஓடும் ரயிலில் கூச்சலிட்டபடி அங்குள்ள கழிப்பறைக்குள் சென்று தஞ்சமடைய முயன்றார்.
ஆனாலும் ஹேமராஜ் அந்த பெண்ணை தாக்கி பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். அதன்பின்னர் ஹேமராஜ் காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி தலைமறைவானார். இதுதொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து ஹேமராஜை கைது செய்தனர்.
முன்னதாக படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஹேமராஜ் குற்றவாளி என அறிவித்தார்.
அவருக்கு வரும் திங்கட்கிழமை தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 32 நாட்களில் வழக்கு முடிவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.