தமிழர் பகுதியில் பாலியல் துஷ்பிரயோகம் ; மன உளைச்சலில் தந்தை தற்கொலை
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவருக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நஞ்சு அருந்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ் தகவல்களின்படி, 54 வயதுடைய நபர் ஒருவர் 12 வயது சிறுமி மற்றும் அவரது 10 வயது தோழியுடன் தொடர்புடைய பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, சம்பவம் சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், சந்தேகநபர் வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது 12 வயது சிறுமி மற்றும் அயல் வீட்டைச் சேர்ந்த 10 வயது சிறுமி மட்டும் அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் தாயார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய இரு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தனது மகளுக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் சம்பவத்தால் கடும் மனவேதனைக்குள்ளான 12 வயது சிறுமியின் தந்தை, நஞ்சு அருந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரது சடலம் நேற்று மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.