இந்தியாவுக்கு தாரைவார்க்கப்படவுள்ள திருகோணமலையின் பல இடங்கள் ; வெளியான தகவல்
திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதாக மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம் சாட்டியுள்ளார்.
காலியில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம்
இந்தியா, முதலீட்டு வலயத்தை நிர்மாணிப்பதற்காக திருகோணமலையில் 625 சதுர அடி நிலப்பரப்பை கோருகிறது. இது கொழும்பு மாவட்டத்தின் அரைவாசிப்பகுதியை ஒத்ததாகும்.
அதேபோன்று 62 எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்குகின்றனர். இதற்காக சுமார் 800 ஏக்கருக்கும் அதிக நிலப்பகுதி ஒதுக்கப்படுகிறது. சம்பூர் மின்முனையத்துக்காக 400 ஏக்கர் காணி வழங்கப்படுகிறது.
அதேபோன்று குச்சவெளி பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வுக்காக 100 ஏக்கர் காணியை வழங்குகின்றனர். முத்துநகர் பகுதியில் சூரிய சக்தி மின் படலத்தை அமைப்பதற்காக மேலும் காணி வழங்கப்படுகிறது.
இதுவே திருகோணமலை விடயத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தமாகும் என்று மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.