பஸிலை ஓரங்கட்டிவிட்டு பயணத்தை தொடருங்கள்; கோட்டாபயவிடம் பிரபல தேரர் கோரிக்கை
பஸில் ராஜபக்சவை ஒதுக்கிவைத்துவிட்டு பயணத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தேசிய பிக்கு அறிஞர்களின் கருத்தரங்கு’ அமைப்பின் பிரதானியான பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் கோரிக்கை விடுத்துள்ளார் .
2019 ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக தீவிர பரப்புரைகளில் ஈடுபட்ட முக்கிய தேரர்களில் இவரும் ஒருவர் ஆவார். மெதகொட அபயதிஸ்ஸ தேரர், சிங்கள, பௌத்த வாக்கு வங்கியை முழுமையாக அறுவடை செய்யும் நோக்கில் பரப்புரை கூட்டங்களின்போது தேசியவாதத்தை விதைத்ததுடன், இன உணர்வைத் தூண்டும் விதத்தில் அனல் பறக்கும் அறிவிப்புகளை விடுத்த்தவர் என்பது நினைவில்கொள்ளத்தக்கது.
வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதயகம்மன்பில உட்பட 11 கட்சிகள் அணியின் பிரதிநிதிகளுக்கும், தேசிய அமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளும், புத்திஜீவிகளும் மேற்படி ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
மேற்படி சந்திப்பின்போது கருத்து வெளியிடுகையிலேயே பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதன்போது மேலும் தெரிவித்த மெதகொட அபயதிஸ்ஸ தேரர், பஸில் ராஜபக்ச என்ற நபரால்தான் 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. எதிர்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கும் சக்தியாக அவர் மாறுவார் என்பதை நாம் உணர்ந்தோம்.
எனினும், தேரரே, என்னை நம்புங்கள், புதிய அரசமைப்பில் இரட்டை குடியுரிமை என்ற இடத்துக்கு இடமளிக்கப்படமாட்டாது என்ற உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கினார். சந்திரிக்கா, ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரால் புதிய அரசமைப்பை கொண்டுவரமுடியாமல்போய்விட்டது, அந்த பணியை முன்னெடுக்க தங்களால் முடியுமா என ஜனாதிபதியிடம் நான் வினவினேன்.
நானும் அவர்கள் போன்ற ஒருவர் என்றா நீங்கள் கருதுகின்றீர்கள் என ஜனாதிபதி திருப்பி கேட்டார் என தெரிவித்த தேரர், இன்று 11 மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்தும் நிலைக்கு நாடு வந்துள்ளதாகவும் விசனம் வெளியிட்டார்.
நாட்டில் இன்றைய நிலமிக்கு கொரோனா மட்டும் தற்போதைய காரணம் அல்ல என தெரிவித்த அவர், ஆட்சிக்கு வந்தபிறகு மனிதனர்கள் மாறிவிடுகின்றனர். அதனால்தான் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் கோட்டாபய ராஜபக்ச என்னை சந்திக்க வந்தார். அப்போது , இந்நாட்டில் மன்னர் ஒருவர் இருந்தார். அவர் நாட்டுக்காக தனது மகளையே கடலில் போட்டார். எந்த தந்தையால் இப்படி செய்ய முடியும்? ஆனால் நாட்டுக்காக மன்னர் அதனை செய்தார் என்பதனை அவருக்கு கூறினேன்.
ஆழிப்பேரலை அனர்த்தத்தில் இருந்து நாட்டு மக்களை காக்க, களனி திஸ்ஸ மன்னன், தனது மகளை கடலுக்கு பலிகொடுத்தார் என பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பஸில் ராஜபக்சவை அரவணைக்க நாட்டு மக்கள் தயார் இல்லை. எனவே இவர்களை கடலில் போட வேண்டாம், சற்று ஒதுக்கிவைத்துவிட்டு பயணத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பதாகவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் கூறினார்.