இந்திய தூதரக சேவைகளுக்கு இலங்கையில் புதிய சேவை வழங்குநர்
இலங்கையில் விசா, கடவுச்சீட்டு, OCI, சான்றளிப்பு மற்றும் ஏனைய தூதரக சேவைகளுக்கான புதிய அவுட்சோர்சிங் சேவை வழங்குநராக (OSP) 'அல்ஹிந்த் குளோபல் சர்விசஸ்' (Alhind Global Services) நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டியிலுள்ள உதவி உயர்ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள தூதரகப் பொதுப் பணிமனைகள் ஆகியவற்றின் சார்பில், இந்த புதிய சேவை வழங்குநர் 2026 ஜூலை 7ஆம் திகதி முதல் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளார்.

இந்த புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, தூதரக சேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்வதை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பிலும் புதிய இந்தியத் தூதரக விண்ணப்ப மையம் (ICAC) ஒன்று திறக்கப்படவுள்ளது.
இதற்கமைய, ஜூலை 7ஆம் திகதி முதல் விண்ணப்பதாரர்கள் விசா, கடவுச்சீட்டு, ஓ.சி.ஐ மற்றும் ஏனைய தூதரக சேவைகளுக்கான முன்பதிவுகளை 'ICAC Sri Lanka' இணையத்தளம் ஊடாக மேற்கொள்ள முடியும். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புதிய மையங்களில் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.