செம்மணியில் அகழ்வுப் பணி தேவையற்றது; வன்மகருத்துக்களுடன் உதய கம்மன்பில
“யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது”என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு யுத்தம் நடந்த மண். இந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் பலர் மண்ணுக்குள்தான் புதைக்கப்பட்டார்கள்.
எனவே, அந்தப் புதைகுழிகள் யுத்தத்தின் பின்னர் வெளிக்கிளம்பும் போது பலரும் வெவ்வேறு விதமாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
செம்மணியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியை, பெருமளவு நிதிகளை வீண்விரயம் செய்து அரசு அகழ்கின்றது.
இது தேவையற்றது. அந்தப் புதைகுழிக்குள் இருந்து எலும்புக்கூடுகளாக மீட்கப்படுபவர்கள் உண்மையில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாது. ஏனெனில் யுத்தத்தில் மூன்று இனத்தவர்களும் உயிரிழந்தனர்.
எனவே, செம்மணி மனிதப் புதைகுழியைத் தோண்டுவது மீண்டும் இன வன்முறைக்கே வழிவகுக்கும்” என்றார்.