செம்மணி புதைகுழி விவகாரம் ; சர்வதேச விசாரணை அவசியம் ; சுரேஷ் பிரேமச்சந்திரன்
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவா உள்ளிட்ட ஆய்வாளர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கை, சர்வதேச விசாரணையின் அவசியத்தையே வலியுறுத்துவதாக ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தமிழ் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போதைய அறிக்கை பல கேள்விகளை எழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2026ஆம் ஆண்டிலும் 110 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளின்போது 583 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், அகழ்வாராய்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் அனுஷா வன்னிநாயக்க ஆகியோர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள சில கருத்துகள், புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகள் மூடிமறைக்கப்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த புதைகுழிகள் இயற்கை அனர்த்தம் அல்லது பாரிய தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆழிப்பேரலை மற்றும் கொவிட்-19 காலப்பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான பதிவுகள் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் துப்பாக்கிச் சன்னங்களால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் உள்ள நிலையில்இ செம்மணி புதைகுழி விவகாரத்தை அந்தப் பின்னணியிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் உண்மைகளைக் கண்டறியவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் சர்வதேச விசாரணை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் முன்னைய ஆட்சியாளர்களையும் படைத்தரப்பினரையும் பாதுகாக்க முயற்சிப்பதாகத் தோன்றுவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின், சர்வதேச விசாரணையின் ஊடாகவே அது சாத்தியமாகும் என்பதை ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.