மஹிந்தவை கொலை செய்ய பாதுகாப்பு குறைக்கப்பட்டதா? சந்தேகத்தில் மொட்டு உறுப்பினர்
மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 116 பாதுகாப்பு அதிகாரிகள் சேவையிலிருந்து மீள் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (13-12-2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பினை அரசாங்கம் சடுதியாக குறைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிமித்தம் சேவையில் இருந்த பாதுகாப்பாளர்களின் 116 பேர் சேவையில் இருந்து மீள் அழைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலை புலிகள் காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்தவர்கள் இவ்வாறு சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் எண்ணக்கரு இலங்கையில் இன்றும் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறு பாதுகாப்பினை குறைப்பது முறையற்றது.
மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்வதற்காவா அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுவதாக மொட்டுக் கட்சியின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.