கொழும்பில் திடீரென பலமடங்காக அதிகரித்த பாதுகாப்பு! களத்தில் இராணுவம்
கொழும்பில் பல மடங்காக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, படையினருக்கு மேலதிகமாக இராணுவத்தின் கலகமடக்கும் பிரிவினரும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஒத்திவைப்பை எதிர்த்து தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனை தடுப்பதற்காக, வீதிகள் பல பூட்டப்பட்டுள்ளன. கொழும்பில், வைத்தியசாலை சுற்றுவட்டம், பித்தள சந்தி, யூனியன் பிளேஸ், கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட இடங்களிலுள்ள வீதிகள் பூட்டப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டமும் பேரணியும், தாமரை தடாகம் பக்கத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
அந்த சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayaka) தலைமையில் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியால், கொழும்பு கோட்டை, நகர மண்டபம், கொள்ளுப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ், இராணுவத்தின் கலகமடக்கும் பிரிவு, விசேட அதிரடிப்படை ஆகியனவும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 20பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.