திருகோணமலை கடற்படை முகாமின் ரகசிய சிறைச்சாலை குற்றச்சாட்டு ; CID-க்கு நீதிமன்றம் கடும் உத்தரவு
திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் 'கன்சைட்' எனப்படும் நிலத்தடி சிறைச்சாலை தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்துமாறு திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
குறித்த நிலத்தடி சிறைச்சாலையில் கடத்தப்பட்ட பலர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் சம்பவ இடத்திற்குச் சென்று நேரடி கள ஆய்வொன்றை மேற்கொண்டார்.

குறிப்பாக, பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மற்றும் மேலும் பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கள ஆய்வின் பின்னர், விசாரணைகளை தொடர்ந்தும் விரிவாக முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் பணித்துள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பான காணொளி பதிவுகள் மற்றும் நிழற்பட ஆதாரங்களையும் அறிக்கையுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதவானின் கள ஆய்வில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்று முதல் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.