விலகியது மர்மங்கள் நிரம்பிய நீண்டகால கிணற்றின் ரகசியம்!
ஏமனில் உள்ள நரகத்தின் கிணறு என்றழைக்கப்பட்ட கண்ற்றின் விலகாத மர்மங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளிக்கொணர்ந்துள்ளனர். ஏமன் நாட்டில் உள்ள 367 அடி கிணற்றில் முதல்முறையாக ஆராய்ச்சியாளர்கள் இறங்கி சோதனை மேற்கொண்டதுடன் அதன் ரகசியம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
ஏமன் நாட்டில் உள்ள அல்மாரா பாலைவனத்தின் நடுவே 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய கிணறு உள்ளது. இதனை நரகத்தின் கிணறு என்று அப்பகுதியில் உள்ள மக்கள் அழைத்துவருகின்றனர்.
அத்துடன் அந்தக் கிணற்றிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதால் அதில் பூதம் இருப்பதாக வதந்தி பரவியது. சூரிய ஒளி கூட கிணற்றின் சில அடிகள் வரை மட்டுமே தொடுகிறது என்பதால் இருளாகவே தோன்றும் இந்த கிணற்றுக்குள் என்ன இருக்கிறது என்பது நீண்டகாலமாக மர்மமாகவே இருந்துவந்தது.
இந்த நிலையில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 10 பேர் முதல்முறையாக கிணற்றுக்குள் கயிறு மூலம் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர். கிணற்றில் பறவைகள், விலங்குகள் அதிகமாக இறந்துகிடப்பதாலேயே துர்நாற்றம் வீசுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இதன் உள்ளே அழகான நீர் வீழ்ச்சி உள்ளதுடன், பாம்புகள், பூச்சிகள் என்பனவும் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.



