பக்தர்களுக்கு அன்னதானம்; சீல் வைக்கப்பட்ட யாழ்.சந்நிதியான் ஆச்சிரமம்
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் அன்னதான மடமொன்று இன்று சுகாதார பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மடத்தில் சுகாதார விதிமுறைகளை மீறியும், யாசகர்களிற்கு உணவளிக்க வழங்கப்பட்ட சிறப்பு ஏற்பாட்டை துஷ்பிரயோகம் செய்தும் அன்னதானம் வழங்கியதால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் தங்கியுள்ள யாசகர்களிற்கு பொதி செய்யப்பட்ட உணவை வழங்க குறித்த அன்னதான மடத்திற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று வெள்ளிக்கிழமை ஆலயத்தில் பெருமளவான பக்தர்கள் வந்த நிலையில் மடத்தில் தரையில் உட்கார வைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தகவலறிந்து பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் சுகாதார பரிசோதகர் தலைமையிலான சுகாதார பிரிவினர், பொலிசாருடன் அங்கு சென்றனர். இதன்போது முக்கவசம் அணியாமல், சுகாதார விதிகளை பேணாமல் பலர் கலந்து கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்ட தை அடுத்து , மண்டபம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை- 14 நாட்களிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலயத்தில் தங்கியுள்ள யாசகர்களிற்கு உணவளிக்கும் பொறுப்பு வெறொரு மண்டபத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்நிதி ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆலய சூழலில் அமைந்துள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்களிற்கு இன்று வல்வெட்டித்துறை ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கலந்து கொள்ளாத உரிமையாளர்களின் 7 வர்த்தக நிலையங்கள் இன்று சுகாதார பிரிவினரால் மூடப்பட்டது.
எனினும் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.