8ம் வகுப்பு மாணவியை பல மாதங்களாக பாலியல் துன்புறுத்திய பாடசாலை மேலாளர்
இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டம், சதார் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் பயிலும் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாடசாலை மேலாளர் பல மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறுமி அண்மைக் காலமாக வீட்டிலும் பாடசாலையிலும் விநோதமாக நடந்துகொண்டதைக் கவனித்த பெற்றோர்கள், காரணத்தை அறிய முயன்றனர்.
இறுதியாக, அவரது தந்தையிடம் சிறுமி நடந்தவற்றை உடைத்துச் சொன்னபோது, அவர் அதிர்ச்சியில் உரைந்தார்.

சிறுமி தெரிவித்ததாவது, பாடசாலை மேலாளர் தன்னை அடிக்கடி அலுவலகத்திற்கு அழைத்து, கதவைப் பூட்டி, கழிவறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாகவும், “இதை வெளியே சொன்னால் உன்னைத் தேர்வில் தோல்வியடையச் செய்வேன்; உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன்” என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
இந்த துன்புறுத்தல் பல மாதங்களாக தொடர்ந்து வந்ததாக சிறுமி நடுக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன் பின்னர், பாடசாலை மேலாளர் கைது செய்யப்பட்டு, பாலியல் வன்கொடுமை சட்டம் (POCSO) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.