மட்டக்களப்பில் உள்ள பாடசாலையில் வித்தியாசமாக நடைபெற்ற மெய்வல்லுநர் நிகழ்வு!
மட்டக்களப்பு பகுதியில் உள்ள காத்தான்குடி மத்திய கல்லூரியின் 93வது வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வு கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.நிஹால் அஹமட் தலைமையில் இந்நிக்ழவு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மேலும் காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எப்.சில்மியா, காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.எம்.கலாவூதீன், பாடசாலை முன்னாள் அதிபர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள், கல்வியலாளர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழுவினர், பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது உத்தியோகபூர்வ விளையாட்டுக் கொடியினை இல்ல விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் எஸ்.எச்.பிர்தௌஸ் ஏற்றியதுடன், ஆசிரியர் எம்.மோகனகுமாரினால் மூன்று மரியாதை வேட்டுக்களுடன், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீரினால் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு மாணவர்களின் ஓட்டப் போட்டி, பழைய மாணவர்களின் அஞ்சலோட்டம், அணிநடை கண்காட்சி, அணிநடை வகுப்பு, பாடசாலை அபிவிருத்திச் குழுவினரின் சங்கீத கதிரை, என்பன இடம்பெற்றதுடன், பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் க.புருசோத்மன் வழிகாட்டலில் மாணவர்களின் சாசக கண்காட்சி இடம்பெற்றதுடன் கலந்து கொண்டவர்களை நெகிழ்ச்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் றூமி இல்லம் (நீலம்) 256 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தினையும், இக்பால் இல்லம் (சிவப்பு) 207 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினையும், ஒமர் இல்லம் (பச்சை) 203 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
இதன்போது வெற்றி பெற்ற இல்லங்கள், வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டதுடன், மரதம் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு விளையாட்டு முகாமைத்துவக் குழுவினரால் கடந்த 1996.01.16 முதல் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக இணைந்து ஆசிரியராக, பகுதித் தலைவராக, பிரதி அதிபராக மற்றும் கல்லூரியின் வரலாற்றில் அதிகூடிய காலம் அதிபராக கடமையாற்றி கல்லூரியின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டமைக்காக ஆசிரியர் எஸ்.எச்.பிர்தௌஸ் அவர்களுக்கு கல்லூரியின் 93வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் வைத்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.