இலங்கையில் சட்டரீதியாக மோசடி செய்ய திட்டம் ; பொது மக்கள் வெளியிட்ட சந்தேகங்கள்
கிளிநொச்சி கல்மடுகுளம் புனரமைப்பின் போது குளத்திலிருந்து பெறப்பட்ட சுமார் 6000 கியூப் மணல் தற்போது குளத்தடியில் காணப்படுகிறது. குறித்த மணல் தொடர்பில் சமீப நாட்களாக அப்பிரதேச பொது மக்கள் பலத்த சந்தேகங்களை வெளியிட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் மேலும் கூறியதாவது,
சட்டரீதியாக மோசடி
குறித்த மணலை அரசியல் தரப்பு ஒன்று தனக்கு சார்பான அமைப்பு ஒன்றின் ஊடாக கோரிக்கை ஒன்றை விடுத்து அந்த அமைப்புக்கு சார்பாக அதிகாரிகளுக்கு அழுத்தங்களை பிரயோகித்து மணலை குறித்த அமைப்புக்கு வழங்கி பின்னர் அதனை தங்களுடைய ஒருவருக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
இது தொடர்பில் குறித்த நன்னீர் மீன் பிடி சங்கத்தை தொடர்பு கொண்டு பேசிய போது, அங்கிருக்கும் மணலை அதனை குளத்திலிருந்து அகழ்ந்த நிறுவனத்திடமிருந்து அவர்களுக்கு ஏற்பட்ட மணல் கழுவிய செலவினை கொடுத்துவிட்டு தாம் பெற்று அதனை விற்று நன்னீர் மீன்குஞ்சுகளை குளத்தில் விடுவது, வாழ்வாதார உதவிகள் வழங்குவது, கிராமத்தின் முன்னேற்றத்திற்கு என செலவு செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.
குளத்திலிருந்து பெற்ற மணல் கழுவப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது. அந்தளவு மணலுக்கும் கழுவிய செலவை கூட கொடுத்து கொள்வனவு செய்யும் அளவுக்கு அச் சங்கத்திடம் நிதியில்லை.
அவ்வாறு நிதியில்லாத அமைப்பின் ஒன்றின் மூலம் மணலை பெறுவதற்கு அந்த அமைப்புக்கு பின்னால் ஒரு தரப்பு இருந்து குறித்த மணலை சட்டரீதியாக மோசடி செய்ய திட்டம் போட்டிருக்கிறார்கள் என்பதே பொது மக்களின் சந்தேகம்.
இதனோடு தொடர்புபட்ட திணைக்களங்களை தொடர்பு கொண்டு வினவினால் எவரும் குறித்த மணலுக்கு தாங்கள் பொறுப்பு அல்ல என்கிறார்கள்.
எனவேதான் இந்த மணலும் அக்கராய்ன ஆறு புனரமைப்பின் போது பெறப்பட்ட மணல் எப்படி கொண்டு செல்லப்பட்டதோ அப்படி இதுவும் கொண்டுசெல்லப்படவுள்ளதாக கூறுகின்றனர்.