சவுதியின் அதிரடி நகர்வு ; ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து பாரிய எண்ணெய் விநியோகம்
பாரசீக வளைகுடாவில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து செயற்படும் சவுதி அராபியாவின் கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடம் தற்போது அதன் முழு கொள்ளளவான ஒரு நாளைக்கு 70 இலட்சம் பீப்பாய்கள் எண்ணெயை விநியோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புளூம்பெர்க் செய்திச் சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் தடையை தவிர்க்கும் நோக்கில் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சவுதியின் யான்பு துறைமுகம் ஊடாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்போது ஒரு நாளைக்கு 50 இலட்சம் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாளொன்றுக்கு சுமார் 7 இலட்சம் முதல் 9 இலட்சம் பீப்பாய்கள் வரையிலான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் உற்பத்திப் பொருட்களையும் சவுதி ஏற்றுமதி செய்து வருகின்றது.
சாதாரண காலங்களில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன.
இது பாரசீக வளைகுடாவையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் முக்கிய கடல் வழியாகும்.
இருப்பினும், தற்போதைய பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து மாற்றுப் பாதைகள் ஊடாக எண்ணெயை விநியோகிப்பதில் சவுதி அராபியாவின் அராம்கோ நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து அராம்கோ நிறுவனம் இதுவரை உத்தியோகபூர்வமாக கருத்துத் தெரிவிக்கவில்லை என அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.