சனிப்பெயர்ச்சி 2022 : ஏழரை சனி மட்டுமல்ல சனி புத்தி நடந்தாலும் பாதிப்பு தான்!
அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சனிபகவான் நல்லதும் கெட்டதுமான பலன்களைத் தருவார். சிலருக்கு ராகு திசையில் சனி புத்தி நடைபெறும் போது ராகுவும் சனியும் சரியில்லாத நிலையில் இருந்தால் இந்த நிலை ஏற்படும். சனிபகவான் வரும் ஏப்ரல் 29ஆம் திகதியன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இதன் மூலம் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிகிறது.
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இன்னும் சில வாரங்களில் செல்ல உள்ள நிலையில் சனிபுத்தி வரும் போது யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
ஒரு கிரகம் ஒருவருக்கு ஜாதகப்படி நல்ல இடத்தில் அமைந்து அந்த கிரகத்தின் தசை வரும் போது ராஜவாழ்க்கை தான். அதே போல புத்தியும் நல்லதாக இருந்தால் நல்ல விசயங்கள் தானாக நடக்கும்.
புத்தி என்பது, ஒவ்வொரு திசையிலும் நவகிரகங்களும் தன் ஆதிக்கத்தை செலுத்தும். கேது திசை தொடங்கி புதன் திசை வரை மனிதர்களுக்கு தசாபுத்தி நடக்கும் போது சனி புத்தி ஏதாவது ஒரு கால கட்டத்தில் சில ஆண்டுகள் நடக்கும். சனி திசை சனி புத்தியில் தொடங்கி புதன் புத்தி, கேது புத்தி, சுக்கிர புத்தி, சூரிய புத்தி, சந்திர புத்தி, செவ்வாய் புத்தி, ராகு புத்தி, வியாழன் புத்தி என தொடர்ந்து வரும்.
ஒருவர் பூசம், ஹஸ்தம், உத்திரட்டாதியில் பிறந்தவர்களுக்கு சனி அதிபதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போதே சனி மகா திசை நடக்கும். சனி புத்தி நடக்கும் போது சனி இருக்கும் இடத்தை பொறுத்து சுப பலன்களோ அசுப பலன்களோ உண்டாகும். சனி புத்தி நடக்கும் போதும் சிலருக்கு உடல்நலக்குறைவு, பொருள் நஷ்டம் ஏற்படும். ஜாதகத்தில் சனி எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
சனி திசை சனிபுக்தி,
சனிதிசை சனி புக்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும். சனிபலம் பெற்று அமைந்திருந்தால் இரும்புப் பொருட்கள் மற்றும் வண்டி வாகனங்களால் அனுகூலங்கள், அரசு வழியில் அனுகூலம், பெயர் புகழ் உயரும் வாய்ப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, பகைவரும் நட்பாக மாறும் அமைப்பு, உற்றார் உறவினர்களால் உதவி, மனைவி பிள்ளைகளுடன் ஒற்றுமை, ஆசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் போன்ற யாவும் உண்டாகும்.
சனி பலமிழந்திருந்தால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வேலையாட்களால் நிம்மதி குறைவு, மறைமுக எதிர்ப்புகளும் வரும். எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வீண்பழிகளை சுமக்கும் நிலை, சிறை செல்லும் அமைப்பு போன்றவை ஏற்படும்.
கேது திசை சனி புத்தி,
கேது திசையில் சனிபுக்தியானது 1வருடம் 1மாதம் 9நாட்கள் நடைபெறும். சனி பலம் பெற்றிருந்தால் இரும்பு மற்றும் கருப்பு நிற பொருட்கள் மூலம் லாபம் வரும். திருமணம் புத்திர பாக்கியம் அமையும். உயர் பதவிகள், பொன் பொருள், வண்டி வாகனம் சேரும். சனி பலமிழந்திருந்தால் கடுமையான சோதனைகள், உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். எதிர்பாராத விபத்துகளால் உடல் உறுப்புகளை இழக்கும் நிலை ஏற்படும்.
சுக்கிரதிசை சனி புத்தி,
சுக்கிர திசையில் சனிபுக்தியானது 3வருடம் 2மாதம் நடைபெறும். சனி பலம் பெற்றிருந்தால் இரும்பு சம்மந்தப்பட்ட தொழிலில் மேன்மை, அரசு வழியில் அனுகூலம். வண்டி வாகனம் அசையா சொத்துக்கள் சேரும்.
யோகம், ஜாதகத்தில் சனி பலமிழந்திருந்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் எதிர்பாராத விபத்துக்களால் கண்டம் மற்றவர்களிடம் அடிமையாக தொழில் செய்யும் அமைப்பு வண்டி வாகனங்களை இழக்கும் நிலை ஏற்படும்.
ராகு திசை சனி புத்தி
ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும். சுய ஜாதகத்தில் சனிபகவான் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சனிபகவான் பலமிழந்து ராகு திசையில் சனிபுக்தி நடைபெற்றால் எதிர்பாராத விபத்துக்களால் ஊனமாகும் நிலை ஏற்படும்.கடன் தொல்லையால் அவமானம் போன்றவை ஏற்படும் சிலருக்கு தற்கொலை வரை கொண்டுபோய் விடும்.
குருதிசையில் சனி புத்தி
குருதிசையில் சனிபுக்தியானது 2 வருடம் 6 மாதம் 12 நாட்கள் நடைபெறும். சுய ஜாதகத்தில் சனி பலம் பெற்றிருந்தால் தன தான்யம் பெருகும், இரும்பு சம்மந்தப்பட்டத் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வருமானம் பெருகும் சனி பகவான் பலமிழந்திருந்தால் பண வரவுகளில் நஷ்டம், அரசு வழியில் தொல்லை, அபராதம் செலுத்தும் நிலை உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகள் ஏற்படும்.
புதன்திசையில் சனி புத்தி
புதன் திசையில் சனி புக்தியானது 2 வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும். சனி பகவான் பலம் பெற்றிருந்தால் தொழில் வியாபாரம் முலம் லாபம் அதிகரிக்கும். தன தான்ய விருத்தி, ஆடை ஆபரணம் சேரும் புண்ணிய தீர்த்த யாத்திரை, தெய்வ பக்தி உண்டாகும். அதே நேரத்தில் சனி பகவான் பலமிழந்திருந்தால் தொடர் தோல்விகள் ஏற்படும்.
விபத்துகளை சிந்திக்கும் நிலை ஏற்படும். திருமணதடை வீண் பழி, வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு
ஏழரை சனி நடந்தால் மட்டுமல்ல சிலருக்கு சனி திசை சனி புத்தி நடந்தாலே பாதிப்புதான். எண்ணம் போல் வாழ்வு என்பார்கள் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
ஆணவத்தோடு ஆடுபவர்களையும் அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைப்பவர்களையும்தான் சனிபகவான் ஆட்டி வைப்பார். ஜாதகருக்கு தற்போது எந்த திசை நடப்பதாக இருந்தாலும் முதலில் விநாயக பெருமானை வழிபட்டு பின்பு, எந்த திசை நடக்கிறதோ அந்த திசைக்கேற்ற இறைவனை வழிபட நன்மைகள் ஏற்படும்.
சனி பகவானால் ஏற்படும் சங்கடங்களை சரி செய்ய விநாயகர் வழிபாடு நன்மை செய்யும், ஆஞ்சநேயரை வழிபடலாம். சனிபகவானின் குருவான பைரவரை வழிபட பாதிப்புகள் குறையும் என சொல்லப்படுகின்றது.