யாழில் போலி அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி மணல் கடத்தல்
யாழ்ப்பாணம் சாவக்கச்சேரிப் பகுதியில் போலி அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தலைமை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தினால் வழங்கப்படும் ஆற்று மற்றும் தரை மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் போன்று போலி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து மிகவும் லாபகரமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட. 2 டிப்பர்களை இன்று மதியம் சாவகச்சேரி பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பிரதேச போதைப் பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று மதியம் யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியின் தனங்கிழப்பு பகுதியில் வைத்து குறித்த இரண்டு டிப்பர்களையும் பிடித்ததுடன் சாரதிகளையும் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் இருவரையும் நாளை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதுடன்,
குறித்த அனுமதிப்பத்திரம் போலியாக தயாரிக்கப்பட்டது தான் என்பதனை புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இதில் ஒரு சாரதிக்கு பிரிதொரு வழக்கு தவணைக்கு சமுகமளிக்காதமைக்காக சாவகச்சேரி நீதிமன்றத்தால் பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.