கிளிநொச்சியில் முன்னாள் ஜனாதிபதியின் உறவினர் பெயரில் இடம்பெறவிருந்த சட்டவிரோத செயல்!
கிளிநொச்சி - பூநகரியில் உள்ள பரமன்கிராய் பகுதியில் 130 ஏக்கர் நிலத்தில் இன்று முதல் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உறவினர் பெயரில் உள்ள நிறுவனத்திற்கு மணல் அகழப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, பூநகரி பரமன்கிராயில் காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின் ஆளுகையில் உள்ள நிலத்திலேயே இவ்வாறு மணல் அகழ்வதற்காக நேற்று (30-09-2024) கனரக வாகனங்கள் அப்பகுதிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
மணல் அகழப்படவுள்ள பகுதியைச் சூழ பெருமளவு மக்கள் வாழ்கின்றபோதும் அது குறித்து கருத்தில் எடுக்கப்படாது இதற்கான ஏற்பாட்டினை 2024-09-26 அன்று புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர் வழங்கியுள்ளார்.
இது குறித்து காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது,
உண்மையில் அப்பகுதி எமது ஆளுகைக்கு உட்பட்ட நிலம்தான் ஆனால் எவருக்கும் பாரப்படுத்தப்படாதபோதும் அப்பகுதி தமக்குச் சொந்தம் என பெருந்தோட்டச் சபை உரிமை கோர நிற்பதோடு இந்த மணல் அகழ்விற்கான அனுமதிகளையும் அவர்களே வழங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இப் பகுதியில் வாழும் மக்கள் எமக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான இந்த நடவடிக்கையை அனைவரும் தடுத்து நிறுத்த முன் வர வேண்டும் என அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.