நாளை யாழில் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ள சம்பந்தன் உடல்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடல் 04ஆம் திகதி வியாழக்கிழமை யாழில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் காலை ஒன்பது மணி முதல் மாலை 4மணி வரையில் அன்னாரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இதற்காக அன்னாரது பூதவுடல் விமானம் மூலம் கொழும்பில் இருந்து கொண்டுவரப்படவுள்ளதோடு இன்று மலையில் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகளுக்காக மீண்டும் விமானம் ஊடாக கொண்டு செல்லப்படவுள்ளது.
இதேவேளை, வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட அரசியல் பெருந்தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இரா.சம்பந்தனின் புகழுடலை கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்காக வைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் அவரது புகழுடன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் 04,05ஆம் திகதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.