அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி ; நன்றி கூறிய சஜித்
உள்ளுராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் ஊடாக அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அத்துடன் உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பின்னர் இன்று (7) விசேட அறிவிப்பை வெளியிட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சதித்திட்டங்கள்
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதித்திட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களிலும் பெரும் மக்கள் ஆணைகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளமையை உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
நாட்டு மக்கள் அரசாங்கத்தின் பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர்.
எனவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்ற செய்தியை நாட்டு மக்கள் இத்தேர்தலின் ஊடாக எமக்கு முன்வைத்துள்ளனர் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.