விமானத்தில் கைவரிசையை காட்டிய சீன பிரஜை ; மடக்கிப்பிடித்த பொலிஸார்
12 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 4ஆயிரம் அமெரிக்க டொலர்களை திருடினார் என்றக் குற்றச்சாட்டில் 54 வயதான சீனப்பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த சீனப்பிரஜையே கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால், ஞாயிற்றுக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
நன்கொடை பணம் திருட்டு
இந்த விமானத்தில் பயணித்த ஒரேயொரு சீன நாட்டவர் இவர் ஆவார்.
விமானத்தில் பயணித்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 81 வயது அமெரிக்க கத்தோலிக்க பாதிரியார் ஒருவர், இந்த 4,000 அமெரிக்க டொலர்களை இலங்கையில் வசிக்கும் தனது மூத்த சகோதரிக்கு மருத்துவ சிகிச்சைக்காக நன்கொடையாகக் கொண்டு வந்தார்.
விமானம் அபுதாபியிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சீன நாட்டவர் பாதிரியாரின் சூட்கேஸிலிருந்து பணத்தைத் திருடிச் சென்றார்.
இது குறித்து விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த பின்னர், அவர்கள், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, சீன நாட்டவரைக் கைது செய்தனர்.