நிதி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட 50,000 வாடிக்கையாளர்கள் !
நாடு முழுவதும் ஏராளமான சட்டவிரோத நிதி நிறுவனங்கள் தோற்றம் பெற்று, அப்பாவி மக்களின் பணத்தைச் சுரண்டி வருகின்றதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
இதற்கு மிக அன்மித்த உதாரணமாக கிழக்கு ஹேவாகம் கோரள கூட்டுறவு சங்கம் தமது சேமிப்பு நிதியை இது போன்ற ஒரு நுண் நிதி வங்கியில் வைப்பிலிட்டதனால், கோடிக்கணக்கான ரூபா இழக்கப்பட்டு, சுமார் 50,000 வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகைகளும் இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறே, இணையவழி கடன் மாபியா மூலம், பல்வேறு நபர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டிற்கு வந்து இணையவழியாக கடன்களை வழங்கி, இறுதியில், மிரட்டல் விடுத்து, அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயல்முறைகளும் நாட்டில் நடந்து வருகின்றதாகவும் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.
மேலும், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல்களை மதிக்காமல், வாகனங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தும் லீசிங் நிறுவனங்களினது செயல்களும் அதிகரித்து காணப்படுவதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் , இந்த விடயத்தில் அரசாங்கம் அவசரமாக தலையீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.