தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடும் சஜித் - ரணில்! ஒரேவொரு வித்தியாசம்
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியை வீழ்த்த ஜனாதிபதி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
சஜித் தரப்பில் இருந்து முக்கிய தலைவர்களை தம்பக்கம் வளைக்கும் முயற்சிகளில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார்.
அது குறித்து கடந்த 9ஆம் திகதி கொழும்பில் ரகசிய சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொது வேட்பாளராக களமிறங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ரணில், தொலைபேசியை (நவீன) தமது சின்னமாக பயன்படுத்தக் கூடும் என்றும் தெரிய வருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னமாக தொலைபேசி ஏற்கனவே உள்ளது. இது பழைய அதாவது ஆரம்பகாலத்தில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசியாகும்.
ஆனால், அமைச்சர் திரான் அலஸுக்குச் சொந்தமான யு.பி.பி (UPP) கட்சியின் சின்னமாக நவீன தொலைபேசி உள்ளது.
இந்த சின்னத்தில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு ரணிலிடம் அவர் பலமுறை கூறியுள்ளதாக தெரியவருகிறது.
சமீபத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மாநாடொன்றில் “சுற்றும் காலம் முடிந்துவிட்டது இனி அமுக்கும் காலம்“ என ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
இது அவரது சின்னத்தை மறைமுகமாக வெளிப்படுத்த கூறிய கருத்தாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தொலைபேசி சின்னத்திலேயே போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சி பழைய வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.