சமிந்த விஜேசிறியை கைவிடப்போவதில்லை; சஜித் பிரேமதாச சபதம்
எதிர்க்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, சிரைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைவிடப்போவதில்லை என்றும், மேன்முறையீட்டு நடைமுறை மூலம் நீதி நிலைநாட்டப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
சமிந்த விஜேசிறிக்கு இறுதியில் நீதி கிடைக்கும் என நம்புவதாக ஊடகவியலாளர்களிடம் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நீதி வழங்கும் நீதித்துறையை நாங்கள் நம்புகிறோம்
சமிந்த விஜேசிறி பதுளை மாவட்டத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் மட்டுமல்ல, இலங்கை மக்களுக்கும் ஒரு தூணாக திகழ்கிறார். அவர் தனது அரசியல் மற்றும் நாடாளுமன்றப் பணிகள் மூலம் குடிமக்களுக்காக அச்சமின்றி பல தீவிரமான பிரச்சினைகளை எழுப்பியுள்ளார்.
நாங்கள் அவருடன் நிற்பதுடன், நீதி வழங்கும் நீதித்துறையை நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார். பதுளை மேல் நீதிமன்றம் இன்று சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை அடுத்து இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் அதிகாரிகளைத் தடுத்து நிறுத்துதல், உடல்ரீதியான காயத்தை ஏற்படுத்தியமை மற்றும் குற்றவியல் மிரட்டல் விடுத்தமை ஆகிய குற்றங்களில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2019 ஆம் ஆண்டு பண்டாரவளை வட்டாரத்திற்கு அருகில், பொலிஸ் ஜீப் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை முந்திச் சென்றது தொடர்பான சம்பவமே இந்த வழக்கிற்குக் காரணமாகும்.
அப்போது ஏற்பட்ட மோதல் முற்றியதால், பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக அரச தரப்பு வழக்குத் தொடுநர்கள் தெரிவித்தனர். நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி, விஜேசிறியைக் குற்றவாளியாக அறிவித்து சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.