யாழில் வேலையில்லா பட்டதாரிகளை சந்தித்த சஜித்!
யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
அத்துடன் பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.
கல்வித்துறையில் சீர்திருத்தம்
வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (10) பாரபட்சமற்ற வேலைவாய்ப்பை வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்றது.
போராட்ட இடத்துக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்.
தமது ஆட்சி உருவாகும்போது கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவருவதாகவும், மாற்றுத் திறனாளி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரபிரகாஷ் உள்ளிட்ட அமைப்பாளர்களும் உடனிருந்தனர்.