சுரேஷ் சலேவை குறிவைத்து ராஜபக்சக்களை பழிவாங்க முயற்சி ; சாகர காரியவசம் குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் முன்னாள் புலனாய்வுத் துறைத் தலைவர் சுரேஷ் சலேவை குறிவைத்து, இறுதியில் ராஜபக்ச குடும்பத்தினரைப் பழிவாங்கும் அரசியல் நோக்கத்துடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சலகுண அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவரும் நோக்கில் திட்டமிடப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் முற்றாக நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலேயே பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து வலுவான அரசியல் அடித்தளத்தை உருவாக்கியிருந்ததாக குறிப்பிட்டார்.
எனவே, தேர்தலில் வெற்றிபெறுவதற்காக இத்தகைய தாக்குதலை நடத்த வேண்டிய அவசியம் அப்போது தங்களுக்கு இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் யாருக்கேனும் சந்தேகங்கள் இருந்தால், அவற்றை சட்டரீதியாக விசாரித்து, சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு தாம் ஒருபோதும் எதிர்ப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
சுரேஷ் சலே தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், ராஜபக்ச குடும்பத்தின் மீதான அரசியல் அச்சமே அதற்குப் பின்னணியாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், அரசாங்கத்திடம் உண்மையான சாட்சியங்கள் இருந்தால் அவற்றை மறைக்காமல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சாகர காரியவசம் வலியுறுத்தினார்.
முறையான சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, கைது மற்றும் அழுத்தங்கள் மூலம் செயற்கையான சாட்சியங்களை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் தனது கண்டனத்தை வெளியிட்டார்.