ஈவிரக்கமற்ற தாக்குதல்; ஐ.நா. செயலாளரை பதவி விலக வலியுறுத்தும் இஸ்ரேல்!
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பதவி விலக வேண்டுமென இஸ்ரேல் கூறியுள்ளது. கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்று 19 ஆவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், இரு தரப்பிலும் 7000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் காசாவில் பெண்கள், குழந்தைகள் என 5000 இற்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
காரணங்களின்றி ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை
இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில்,
இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகிறது. சர்வதேச மனித உரிமை சட்டம் இப்போரில் மீறப்படுவது வருத்தம் அளிக்கிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரை வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு இடம் பெயர கூறிவிட்டு அங்கேயும் இஸ்ரேல் குண்டு வீசுகிறது.
அதுமட்டுமல்லாது 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு, உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணங்களின்றி ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை. ஹமாஸ் தாக்குதலுக்காக பாலஸ்தீன அப்பாவி மக்களுக்கு தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தார்.
குட்டரெசின் இந்த கருத்துக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் இர்டான் கூறுகையில்,
"ஹமாஸ் தாக்குதலை ஐ.நா. பொதுச்செயலாளர் பொறுத்து கொண்டு நியாயப்படுத்துகிறார். அவர் பதவி விலக வேண்டும் என கூறியுள்ள அதேவேளை, ஐ.நா. பொதுச்செயலாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என இஸ்ரேல் மந்திரி கோஹன் கூறியுள்ளார்.