முற்றிலும் உருக்குலைந்து போன உக்ரைனியே நகரம்: கூட்டம் கூட்டமாக பதறியடித்து ஓடும் மக்கள்
ரஷ்ய துருப்புகள் நடத்தி வரும் தாக்குதலால் உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள சுமி நகரம் முழுவதுமாக உருக்குலைந்து போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் உள்ள சுமி நகரை சுற்றி வளைத்து ரஷ்யப் படைகள் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மூலம் சுமியில் இருந்து பேருந்துகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

ரஷ்ய எல்லையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுமியில் இருந்து மக்கள் வெளியேறிய வண்ணம் உள்ளனர். இதேவேளை, உக்ரைன் தலைநகர் கீவின் புறநகரான புச்சாவில் ஏவுகணைகளும், ராக்கெட்டுகளும் மழையாக பொழிந்தவண்ணம் உள்ளன.

சுமியில் இருந்து இந்திய மாணவர்கள், சீன மாணவர்கள் மற்றும் பொதுமக்களை போல்ட்டாவா நகருக்கு வெளியேற்ற உக்ரைன், ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளன.
இதன்படி, அங்கிருந்து இந்திய மாணவர்கள் அனைவரும் பேருந்துகள் மூலம் வெளியேற்றப்பட்டதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் தாக்குதல் நடக்கும் சுமி நகரத்தில், 700 இந்திய மாணவர்கள் சிக்கி இருந்த நிலையில், அனைவரும் வெளியேறிவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தீவிமடைந்துள்ளதால் மக்கள் வெளியேறும் தடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.