ரஷியாவின் தாக்குதலால் சின்னாபின்னமாகும் உக்ரைன்; இன்று மீண்டும் பேச்சுவார்த்தை; பெரும் எதிர்பார்ப்பில் உலக நாடுகள்
ரஷ்யாவின் உக்கிரமான தாக்குதலால் உக்ரைன் பெரும்அழிவுகளை சந்தித்துவரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் இன்றைய தினம் 3 ஆம் கட்ட பேச்சுவார்தை இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷிய போர் இன்று தொடர்ந்தும் 7 ஆவது நாளாக நீடிக்கிற நிலையில் உலக நாடுகள் பலவும் பெரும் அச்சத்தில் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் உக்ரைன்-ரஷியா இடையே சமரச பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதும் எந்தவித ஆக்கப்பூர்மான முடிவுகளும் எட்டப்படாமல் அந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

இதனால், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா நேற்று தீவிரப்படுத்தியது. அத்துடன் ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்தும் உக்கிரமான தாக்குதல்களை நடத்த தனது படைகளுக்கு ரஷியா உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ரஷிய படைகள் முழு வீச்சில் தாக்க தொடங்கின.
அதன்படி உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் நகரில் நேற்று காலை முதலே ரஷிய படைகள் குண்டு மழை பொழிய தொடங்கின. ஒரு போர் விமானங்கள் குண்டுகளை வீச, மற்றொரு புறமும் போர் கப்பல்களில் ஏவுகணைகள் பாய்ந்ததனால உகரைன் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
ஏவுகணை வீச்சில் அரசு கட்டிடமும், அருகில் உள்ள குடியிருப்புகளும் சின்னாபின்னமாகின. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உருக்குலைந்துடன் , தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஓக்திர்கா நகரில் மிகப்பெரிய ராணுவ தளத்தின் மீது ரஷிய படைகள் வான்தாக்குதல் நடத்தியதில் உக்ரேனிய வீரர்கள் 70 பேர் கொல்லப்பட்டதுடன் பல வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரமடைந்து வருவதால் நாடு முழுவதும் உள்ள மக்கள் உயிருக்கு பயந்து சுரங்கபாதை ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட நிலத்தடி சுரங்களில் பதுங்கியுள்ளனர்.
அதே வேளையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன்-ரஷியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரஷ்யா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே போரை முடிவுக்கு கொண்டுவர நேற்று முன்தினம் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்டை நாடான பெலாரசில் நடைபெற்றபோதும் உடன்பாடு எட்டப்படவில்லை என ரஷ்யாவும், உக்ரைனும் அறிவித்தது.
இந்த சூழலில் ரஷியா -உக்ரைன் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷிய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு, போர் முடிவுக்கு வருமா என்று உலக நாடுகளிடையே எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.