கீவ் நகர பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா ராணுவம்!
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கீவ் நகரில் நடத்த உள்ள தாக்குதல் தொடர்பாக ரஷ்ய ராணுவம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய ராணுவம் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போர் 6 வது நாட்களாக தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.
இந்த போர் காரணமாக சுமார் பலரும் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற அதன் எல்லைகளில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
இந்தப் போர் காரணமாகக் கடந்த திங்கட்கிழமை பெலராஸ் நாட்டில் வைத்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது உக்ரைன் நாட்டில் இருக்கும் ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளக் கூடிய சில விவகாரங்கள் குறித்து அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது, இதனால் விரைவில் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இன்றைய தினம் ரஷ்யப் படைகள் மீண்டும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களில் ரஷ்யா குண்டு மழை மொழிந்துள்ளது. இந்நிலையில், பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், கீவ் நகரில் ஏவுகணை தாக்குதலை நடத்த உள்ளதாகவும் அங்குள்ள பொதுமக்கள் உடனடியாக நகரை விட்டு வெளியேற வேண்டும் என்று ரஷ்ய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கீவ் நகரில் உள்ள உக்ரைன் நாட்டின் உளவு கட்டிடங்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்த உள்ளதாகவும் இதனால் அதன் அருகே உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் ரஷ்ய பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை, "இந்த ராணுவ நடவடிக்கை தொடர்பாகப் பரப்பப்படும் போலி செய்திகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கீவ் நகரில் உள்ள உளவு கட்டிடம் மற்றும் 72வது உளவியல் செயல்பாடுகளுக்கான தொழில்நுட்ப மைய கட்டிடங்களைத் தாக்கும் வகையிலான துல்லிய ராக்கெட்கள் ஏவப்பட உள்ளன.
எனவே, இந்தக் கட்டிடங்களைச் சுற்றியுள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியறேும்படி கேட்டுக் கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பில் ரஷ்யா தாக்குதலை நடத்தலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யத் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே ஏற்கனவே சுமார் 40 மைல் நீளத்திற்கு ரஷ்ய ராணுவத்தின் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.
மக்கள் இருக்கும் பகுதிகளில் எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை என்றும் ராணுவ தலங்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுவதாகவும் ரஷ்யா தொடர்ச்சியாக விளக்கம் தெரிவித்து வருகிறது.
இருந்த போதிலும் சமீபத்தில் வெளியான சாட்டிலைட் படங்கள் அனைத்தும் ரஷ்யா மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதையே காட்டுகிறது.