பேருந்தில் இருந்த 4 பெண்கள் உட்பட 7 பேரை சுட்டுக் கொன்ற ரஷ்யப் படையினர்!
உக்ரைனில் கார்கிவ் பகுதியில் பேருந்துக்குள் இருந்தவர்களை ரஷ்ய படையினர் சுட்டுக் கொன்று இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அங்குள்ள நிலைமையை விவரித்த டொனெட்ஸ்க் பிராந்திய அரசு நிர்வாகத்தின் தலைவர் பாவ்லோ கிரிலென்கோ, சம்பவ பேருந்துக்குள் நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் கொல்லப்பட்டு இருப்பதாக கூறினார்.
கார்கிவில் இருந்து இஸியம் நோக்கி சென்ற அந்த "ஷட்டில் பஸ்" (சாம்பல் நிற ஃபோக்ஸ்வேகன்) நோக்கி ரஷ்யப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கிரிலென்கோ தெரிவித்தார்.
இந்த சம்பவம் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள வோலோகோவி கிராமத்திற்கு அருகே நடந்தது. "பிப்ரவரி 26-02-2022 முதல் பேருந்துக்குள் இருந்த எவருடனும் எந்த தொடர்பும் இல்லாததால், அவர்கள் இறந்துவிட்டதாகவோ காணவில்லை என்றோ நிர்வாகம் கருதியதாக அவர் தெரிவித்தார்.
வோலோகோவ் யார் என்ற பகுதியில் வசித்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, பேருந்தில் இருந்தவர்கள் இறந்ததாக அந்த பிராந்திய மேயர் தனது முகநூலில் பக்கத்தில் தெரிவித்தார்.
ஆனால், அதில் இருந்த இரண்டு பெண்கள் உயிருடன் இருப்பதாக சிலர் அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டனர். இருவரில் ஒருவர் இப்போது வைத்தியசாலையில் இருப்பதாகவும் ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அந்த பேருந்து சுடப்பட்ட இடம் ரஷ்ய ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் தற்போது இருப்பதால், அவர்களின் நிலையை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் பேருந்தில் சுடப்பட்டவர்களின் சடலத்தை கூட ரஷ்யப் படையினர் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என்றும் டொனெட்ஸ்க் பிராந்திய தலைவர் தெரிவித்துள்ளார்.