உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்யாவின் மிசேச்சத்தமான தாக்குதல்; 47 பேர் உயிரிழப்பு
யுக்ரேனின் செரினிஹீவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல்களில் 47 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்கள், யுக்ரேன் முழுவதும் நகரங்கள், கிராமங்களை அழித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு முன்பும், தாக்குதலுக்குப் பின்பும் அந்த பகுதிகளின் புகைப்படங்கள் அங்கு ஏற்பட்டுள்ள சேதத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.
நேற்று அதிகமான ஷெல் தாக்குதல்கள் காரணமாக, மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டதாக உள்ளூர் அவசர சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, அப்பகுதியில் இதுவரை 148 பேர் பலியானதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் குடிமக்கள் எனவும் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
யுக்ரேனின் வடக்கு பகுதியில் உள்ள செரினிஹீவில் 3,00,000 பேர் உள்ளனர். இந்நகரம் ரஷ்யா மற்றும் பெலாரூஸ் எல்லைகளுக்கு அருகில் உள்ளது. ரஷ்ய படை கைப்பற்றிய அணு உலை இருக்கும் ஸிப்போரிஷியாவில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியர் ஒருவர் பிபிசியிடம் பேசினார்.
பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஸிப்போரிஷியா அணுமின் நிலையத்தில் ரஷ்ய ராணுவம் இரவு முழுவதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதை தான் கண்டதாக தெரிவித்தார்.
“அங்குள்ள கட்டடம் ஒன்றில் தீப்பிடித்தது எனக்குத் தெரியும். நல்லவேளையாக, அது அணுஉலை அல்ல. அங்குள்ள மக்கள் மீதான தாக்குதல் அது. அதுவும் கெட்ட செய்திதான், ஆனால், குறைந்தபட்சம் அணு உலைக்கு ஆபத்து இல்லை,” என்றார்.
“எங்கள் பகுதிக்கு மட்டும் இது கவலையான விஷயம் அல்ல. எனக்குத் தெரிந்தவரையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலைகளுள் இதுவும் ஒன்று என்பதால், யுக்ரேனுக்கும் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இது கவலைக்குரிய விஷயம்.
“இது பைத்தியக்காரத்தனமானது, பயங்கரவாதம். இதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இதுகுறித்து உலகம் ஏதாவது செய்ய வேண்டும்” என்றார். தனக்கு ரஷ்யாவில் குடும்பமும் நண்பர்களும் உள்ளதாகவும், அங்குள்ளவர்கள் இரு குழுக்களாக பிரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யுக்ரேனில் புதின் அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என மூளைச்சலவை செய்யப்பட்டவர்களும் மறுபுறம் “மிகவும் அச்சத்திலும் அவமானத்திலும் இருப்பவர்கள்” என்றார்.




