முல்லைதீவு வைத்தியசாலை தொடர்பில் பரவும் வதந்தி!
அனுராதபுர வைத்தியசாலையில் பழுதடைந்துள்ள அகநோக்கி (Endoscopy) உபகரணத்திற்கு பதிலீடாக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு புலம்பெயர் தமிழர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அகநோக்கிக் கருவியினை கையளிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சு கோரவுள்ளதாக சமூக ஊடகங்களிலும் சில இணையத்தளங்களிலும் பரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இத்தகவலை முல்லைத்தீவு (மாஞ்சோலை) வைத்தியசாலை பதில் பணிப்பாளர் சண்முகராசா தெரிவித்துள்ளார் .
திருத்துவதற்கான நடவடிக்கைகள்
இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் குழப்பமடையத்தேவையில்லை என்றும், இதுவரை அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு வைத்தியசாலையில் தற்போது இரண்டு அகநோக்கிக் கருவிகள் உள்ளன. அவற்றில் ஒன்று 2012 ஆம் ஆண்டு இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் அது தற்போது செயலிழந்துள்ளதால் அதனைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது அகநோக்கிக் கருவியானது இலங்கை அரசின் நிதி ஊடாக பெறப்பட்டது.
அது தற்போது பாவனையில் உள்ளது. அதேசமயம் புலம்பெயர் மக்களால் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அகநோக்கிக் கருவி எதுவும் நன்கொடையாக இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், “மத்திய சுகாதார அமைச்சிடம் இருந்தோ அல்லது வேறு எவரிடம் இருந்தோ அனுராதபுர வைத்தியசாலைக்கு எமது அகநோக்கிக் கருவியைக் கையளிக்குமாறு கோரிக்கை விடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
அதேவேளை இது முற்றிலும் ஆதாரமற்ற தகவல் என மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.