ராஜபக்க்ஷ அரசை மீண்டும் கொண்டுவருவதற்கான வதந்தியே விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் !
ராஜபக்க்ஷ அரசை மீண்டும் கொண்டுவருவதற்கும், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ஸவுக்கு உள்ள எதிர்ப்பினை சமாளிப்பதற்காகவும் மீண்டும் விடுதலைப்புலிகள் உருவாகின்றார்கள் என்ற நிலையினை ஏற்படுத்த முனைவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் சாடியுள்ளார்.
ஐநாவின் பொறுப்புக்கூறல் என்ற விடயத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக புலிக்காய்ச்சல் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வாரத்தின் ஐந்தாவது நாளான நேற்று மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் 17தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட நினைவுத்தூபி அருகே நேற்று முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தர்மலிங்கம் சுரேஸ் , கோறளைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் கு.குணசேகரன் உட்பட பொதுமக்கள் பலாரும் கலந்துகொண்டனர்.
இதன்போது நினைவுத்தூபியில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகள் உட்பட பொதுமக்கள் ஈகச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டது.