அரசபாணியில் திருமண அழைப்பிதழ்; ஒரு அழைப்பிதழின் எடை இவ்வளவா? வியக்கவைத்த செல்வந்தர்!
திருமணங்கள் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதாக சொல்லப்படுகின்றது. எனினும் இரு குடும்பங்கள் இணைந்து இருமணங்களை சேர்த்துவைக்கும் இந்த சுபநிகழ்ச்சி அந்தந்த பரம்பரியங்களுக்கு ஏற்ப கோலாகலமாக நடைபெறும்.
அதிலும் இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள் பலர் தங்கள் பிள்ளைகளின் திருமண சடங்குகளை மிக கோலாகலமாகவும், ஆடம்பரமாகவும் நிகழ்த்துவார்கள். அந்த வகையில் குஜராத்தில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் தன் மகன் திருமணத்திற்காக மிகப்பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
அதிலும், அரச பாணியில் அவர் உருவாகியுள்ள திருமண அழைப்பிதழ் மக்களை வாயடைக்கச் செய்துள்ளது. ராஜ்கோட்-சௌராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மௌலேஷ்பாய் உகானி என்பவரின் மகன் ஜெய் உகானிக்கும், சோனால்பென் உகானிக்கும் வருகிற நவம்பர் 14 முதல் 16 வரை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது.

அதற்காக அரச பாணியில் திருமண அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த திருமண அழைப்பிதழ் 4 கிலோ மற்றும் 280 கிராம் எடை கொண்டதாக உள்ளதாம். அதிக எடை கொண்ட அட்டையில் திருமண அழைப்பை உருவாக்குவதற்கான மொத்த செலவு ரூ.7,000 ஆகும் என கூறப்படுகின்றது. சுமார் ஏழு பக்கங்களைக் கொண்ட அட்டையில் மூன்று நாட்களுக்குத் திட்டமிடப்பட்ட திருமண விழாக்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதோடு இந்த அழைப்பிதழ் வந்த பெட்டியில் விலையுயர்ந்த பருப்பு வகைகளும் வைக்கப்பட்டிருந்தன. முந்திரி, பாதாம், திராட்சை, சாக்லேட்டுகளும் அழைப்பிதழ் பெட்டியை அலங்கரித்தன. அந்த அரச அழைப்பிதழில் ஸ்ரீநாத்ஜியின் தரிசனம் முதலில் காணப்பட்டது.
மௌலேஷ்பாய் மற்றும் அவரது குடும்பத்தினர் கிருஷ்ணர் மற்றும் துவாரகாதீஷ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் துவாரகா கோயிலின் அறங்காவலராகவும் மௌலேஷ்பாய் உள்ளாராம்.
மூன்று நாள் திருமண விழாவின் போது இந்த முக்கியமான நிகழ்வைக் குறிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளனவாம்.
மேலும், இந்த மூன்று நாளும் முறையான திருமண விருந்து விருந்தினர்களுக்கு வழங்கப்படும். விருந்தில் ஒரு தட்டின் விலை ரூ.18,000 ஆகும். இந்த திருமண நிகழ்ச்சி 26 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள உமைத் பவன் அரண்மனையில் நடைபெறுகிறது.
இந்த அரண்மனை இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஹோட்டல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உமைத் பவன் அரண்மனையில் ஒரு அறையைப் பெறுவது என்பது மிகவும் கடினம். ஏனெனில் இங்கு ஒரு இரவு தங்குவதற்கு ரூ. 50,000 செலவாகுமாம்.
அதிலும் சில நேர்த்தியான அறைகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கூட செலவாகும்.
அதோடு இந்த அரண்மனையில் ஹனிமூன் சூட் ரூமில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு ரூ.7.5 லட்சம் செலவாகும் என்று கூறப்படுகிறது.